Tuesday, November 28, 2006

முழு மலையகமும் நீரில் முழ்கும் அபாயம்




எஸ்.நயனகணேசன்
படப்பிடிப்பு :- துஷான்
பொல்கொல்லை அனை


உலகில் இன்று அதிகளவில் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகிறது. ஆனால் இவற்றை தடுப்பதற்கு எந்தளவு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதே கேள்விக்குறி.
உதாரணமாக அண்மைக்காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அடைமழை காரணமாக மண்சரிவுகள் இடம்பெற்றதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதனால் ஏற்பட்ட உயிரச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்களும் அதிகமாகும். நிலைமை இவ்வாறிருக்கையில் பல வருடங்கள் மேற்கொள்ளப்பட முடியாதிருந்த மேல்கொத்மலை நீர்த்தேக்க திட்டம் இன்று அனைவரின் எதிர்ப்புக்கும் மத்தியில் மலையக அரசியல் தலைமைகளின் சுயலாப விட்டுக்கொடுப்பினால் அத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
முழு மலையகமுமே இன்று நீர்த்தேக்கங்களில் அமிழ்ந்துள்ள நிலையில் மற்றுமொரு நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கத் திட்டம் கண்டி கெட்டம்பேயில்; அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இவ் நீர்த்தேக்கத்திட்டத்தின்; மூலம் சூழலுக்கு பல பாதிப்புக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாக சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 10 மெகாவோட்ஸ் மின்னைப்பெறுவதற்காக கெட்டம்பேயில் இவ்நீர்த்தேக்கத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.சுமார் 25 ஹெக்ரயர் நிலப்பரப்பு நீரினால் முழ்கப்படவுள்ளது. கண்டி கெட்டம்பேக்கு 600 மீற்றர் தொலைவில் மகாவலிகங்கைக்கு குறுக்காக இந்நீர்மின் உற்பத்தித் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இதானால் பல விளைவுகள் ஏற்படவுள்ளன நன்மைகளிலும் பார்க்க.
இது தொடர்பாக பசுமை இயக்கத்தின் கல்வி மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்த்தின் இணைப்பாளர் பந்துரங்க கருத்துத் தெரிவிக்கையில் 'உண்மையில் இந்நீர்மின் தேக்கத் திட்டத்தினால் அதிக நன்மையிலும் பார்க்க பாதிப்புக்கள் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படுகின்றது.அதனடிப்படையில் இந்நீர்மின்தேக்கத்திட்டம் அமைக்கப்படுவதினால் இப்பிரதேசத்திலிருந்து ஐந்து குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளன.முதலில் இவர்களுக்கு உரிய நிலங்களும் அதற்குரிய நஷ்ட ஈடுகளும் வழங்கப்படுதல் வேண்டும். இவை பற்றிய தெளிவான விளக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.நீர்த்தேக்கம் உருவாகும் போது இப்பிரதேசத்திலுள்ள மணற்சுவர்கள் அதிகளவில் உறுதியற்றநிலையிலுள்ளதினால் அவை சரிவுக்குள்ளாகும் நிலை ஏற்படும்.தற்பொழுதும் கூட அன்மையில் ஏற்பட்ட அடைமழை காரணமாக அதிகளவில் மண் சரிவுகள் ஏற்படடுள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
இத்திட்டத்தினால் ஆறு நீர்த்தேக்கமாகும் நிலையே காணப்படுகிறது. இவை பற்றிய பூரண தெளிவான விளக்கங்கள் எதுவும் சுற்றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. (Environmental Impact Assessment Report– EIA) நாம் உண்மையில் பாதிப்புக்கள் ஏற்படவதற்கு முன்னரே அவற்றை தடுப்பதற்கு முன்வருதல் வேண்டும். பொதுவாக இவை பற்றி நாம் அதிகளவில் குரல் கொடுப்பதினால் நாம் நாட்டின் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என எம்மீது பழியும் சுமத்தப்படுகின்றது.உண்மையிலே நாம் கோருவது சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத விதத்தில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதாகும்.
இந்நீர்மின் உற்பத்தி திட்டத்தினை ஏசியா ஹைட்ரோ பவர் ஜெனரேஷன் என்ற தனியார் கம்பனி (Asia hydropower genaration PVT company)இதனை நிர்மானிக்கவுள்ளது.இக்கம்பனியினரிடம் கருத்துக் கேட்பதற்கு முற்பட்ட போhது அது தொடர்பாக எதனையும் எம்மால் பத்திரிகைகளுக்கு கூறமுடியாதென தெரிவித்தனர்.மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு எம்மால் கருத்துத் தெரிவிக்கமுடியாதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் நாட்டின் தேவைக்கு மின் உற்பத்தி அவசியம் என்பதில் எந்தவிதமான தர்க்கங்களும் இல்லை.ஆனால் அவை அனைத்தும் குறுகிய நோக்கத்தில் செயற்படுதலே எதிர்காலத்தில் அவை சூழலுக்கு குந்தகமாக அமைந்து விடுகின்றன.
இவ்வாறே (The World Commission on Dams-WCD) ற்கு பேராசிரியர் விதானகே இவ் நீர்த்தேக்கத்திட்டங்களனிhல் ஏற்படப்போகும் பாதிப்பக்கள் பற்றி தெரவித்திருந்தார்.ஆனால் அவை எவற்றுக்கும் அதிகளவு கரிசனைகள் காட்டப்படாததினாலேயே இன்று அவ் அனைக்கட்டுக்கள் உடையும் தருவாயில் காணப்படுகின்றன.
அதனால் இவ் எதிர்வுகூறல்கள் நிருபனமாகிக் கொண்டிருக்கின்றமையினால் அவற்றை கவனத்திற் கொண்டு சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உரிய தரப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, November 24, 2006

மறைந்த ஊடகவியலாளர் அஜித் சமரநாயக்கவிற்கு வானவில்லின் அஞ்சலி.


காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் அஜித் சமரநாயக்கவிற்கு இணையப்பத்தி வானவில் சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் அஞ்சலியினை செலுத்துகின்றோம்.

Thursday, November 23, 2006

இடையூறு தழிழனிற்கு நேர்ந்தபோது


எஸ்நயனகணேசன்
படடப்பிடிப்பு :- துஷான்


எந்தவொரு நாட்டிலாவது இவ்வாறானதொரு கதையை உங்களால் நம்ப முடியுமா?
கிளர்ச்சியாளர்கள் பிரபல்யமான பாடசாலையருகில் குணடடொன்றை வெடிக்க வைத்ததில் இராணுவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.பின்னர் இராணுவத்தினரில் சிலர் பாடசாலையின் பாதுகாப்பிற்காகவென கூறிக்கொண்டு பாடசாலைகளுக்குள் புகுந்து பாதுகாப்பிற்காக நிலத்தில் படுத்துக் கிடந்த மாணவர்களை நேராக நிற்கவைத்து சுட்டுள்ளனர்.அதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர்.பல மாணவர்கள் காயமடைந்தனர்.
அந்த நாட்டின் தேசிய பத்திரிகைகள் மற்றும் ஏனைய ஊடகங்களென தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள் இவ் மாணவப் படுகொலையினை அறிக்கையிடவில்லை.குண்டு வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது பொது மக்கள் உயிரிழந்தாகவே அவை தெரிவிக்கின்றன.
யுத்தத்தின் போது கொல்லப்படும் சாதாரணமக்களின் உரிமைகளுக்காக முன்னிற்காத ஊடகங்கள் யாருடைய தேவைகளுக்காக செயற்படுகின்றன?
நாம் இதன் உண்மையான சம்பவத்தினை பார்ப்போம்.
கடந்த 17 ஆம் திகதி வவுனியா விவசாயக் கல்லூரிக்கறுகில் கிளைமோர் குண்டொன்று வெடித்ததில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் படையினரில் சிலர் விவசாயக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களுக்கு வெடிவைத்துள்ளனர்.அதில் ஐவர் உயிரிழந்ததுடன் பத்து பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வவுனியாவைச் சேர்ந்த அச்சுதன் சிந்துஜன்,திருகோணமலையைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ரி~;வான் மொஹமட் ஆகிய மாணவர்களாவார்களே உயிரிழந்தவர்களாவார்கள்.
போர் நிறுத்தக்கண்கானிப்புக் குழுவும் இச்சம்பவத்தினை உறுதி செய்துள்ளது.அதே வேளை கடந்த திங்கட் கிழமை வவுனியா மடட்டக்களப்பு நகரில் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஹர்த்தாலொன்றும் நடைபெறறுள்ளது.இந்நாட்டின் தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவவத்தினை பிரதான தலைப்பு செய்திகளாக உரிய விதத்தில் பிரசுரித்திருந்தன.பலர் இப்படுகொலை பற்றி சுவர்னவாஹினியில் ஒலிபரப்பாகும் 'முதற்பக்கம்" நிகழ்ச்சியில் பந்துல பத்குமாரவினால் தெரவிக்கப்பட்ட போதே தெரியவந்திருக்கக்கூடும்.
ஆனால் சிங்கள பத்திரிகைகள் (மற்றும் த ஐலன்ட் மற்றும் டெய்லி நியுஸ்) இச்செய்தியினை முழுமையாக மறுத்து விட்டன.சண்டே டைம்ஸ்,சண்டே லீடர் மற்றும் டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே இச்சம்பவத்தினை அறிக்கையிட்டிருந்தன.
தமிழ் மக்கள் தெரிந்திருந்ததனைப் போன்று சிங்கள மக்கள்; இச்சம்பவத்தினை தெரிந்திருக்க மாட்டார்கள்.அதனை தெரியப்படுத்துவது ஊடகத்தின் கடமையல்லவா?
இச்சம்பவத்தின் போது தமிழ் பத்திகைகளை தவிர்ந்த ஏனைய பத்திரிகைகள் அனைத்தும் இன மத அடிப்படையில் ஊடக ஒழுக்க நெறிகளை மீறி செயற்பட்டுள்ளதனையும் அவற்றை இவை உதாசீனப்படுத்தும் வகையிலான செய்திப்போக்கை கடைப்பிடித்துள்ளதனையே இது எடுத்துக் காட்டுகின்றது.

கவனிப்பாரற்ற நிலையில் கண்டி ஹந்தானை வாழ் தோட்ட மக்கள்


பி.சசிகலா
படப்பிடிப்பு:- துஷான்

“நாங்கள் எமது தோட்டத்திற்கு கடன் இல்லை.தோட்டம் தான் எமக்கு கடன்.நாம் தோட்டத்திற்கு பல வருடங்கள் சேவை செய்துள்ளோம்.ஆனால் அவர்கள் எமக்கு என்ன செய்தனர்.பதிலுக்கு எம்மை ஏமாற்றினர்.”
“அது மட்டுமல்ல கடன் அறவிடுவதாகக் கூறி எமது சம்பளப்பணத்தில் ஒரு தொகையினை அறவிடுகின்றனர்.ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பாதுகாப்பு நிதியென (ETF,EPF) அறவிடுகின்றனர்.ஆனால் அவை கடந்த ஐந்து வருடமாக வங்கி கணக்கை சென்றடைவதில்லை.”
“அத்துடன் 70 வயதை அடைந்துள்ள பொழுதிலும் இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்னும் தொழில்புரிகின்றனர். நாம் எங்கு சென்று இவ் அக்கிரமத்தை முறையிடுவது என கண்டி ஹந்தானை தோட்டத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத 70 வயதினையுடைய தோட்டதொழிலாளியொருவர் தமக்கு இழைக்கப்படும் அநியாயத்தை பெரும் கவலையுடைன் தெரிவிவித்தார்.”
மலையக மக்களுக்கு பெரும் சேவை செய்து விட்டதாக தம்மை மார் தட்டிக்கொள்ளும் மலையக தொழிற்சங்க அரசியல் கட்சிகள் இத்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும்,பாரபட்சங்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளாததற்கான காரணத்தை முதலில் நாம் அவர்களிடம் கேட்க விரும்புகின்றோம்.
இத்தோட்டத்தொழிலாளர்களின் கருத்துக்கு ஏற்ப இவ் அநீதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் (JEDB) கீழ் நிர்வகிக்கப்படும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மேற்குப் பிரிவு (West division)இ தொழிற்சாலைப்பிரிவு (கயஉவழசல னiஎளைழைn)இ ஐந்தாம் கட்டை , ஆறாம் கட்டை , ஊராகலை தோட்டம் , கித்துல் முல்லை தோட்டம் மற்றும் பச்சைக்காடு தோட்ட தொழலாளர்களுக்கு எதிராகவே இச்செயற்பாடுகள் தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் அத்தொழிலாளர் தமது பிரச்சினைகளை தெரிவிக்கையில் எமது தோட்ட நிர்வாகம் கடந்த வருடம் எமக்குரிய போனஸ் பணத்தை பெற்றுக்கொடுக்கவில்லை,முற்பணம் வழங்கவில்லை,ஓய்வூதியப் பணம் வழங்கப்படவேண்டியவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்கவில்லை.இவ் அனைத்துக்கும் தோட்ட நிர்வாகமே பதில் கூற வேண்டும்.
இவ் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் எதிராக நாம் கடந்த மாதம் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாகவும் மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தோட்;ட அலுவலகத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 ற்கும் அதிமான தோட்ட தொழிலாளர்கள் ஹந்தானை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளின் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.
ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட ஏழு தோட்டங்களிலும் சுமார் ஐந்நூறிற்கும் அதகமான தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலும் இவ் அனைத்து தோட்டங்களிலும் வாழும் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் இத்தொழிலாளர்கள் தமது அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாத நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.பெரும்பாலும் லயன் குடியிருப்புக்களில் வாழும் இம்மக்களின் சுகாதாரம் மிகவும் சீர்கெட்ட நிலையிலே உள்ளது.குடிநீர் வசதிகளும் மிகவும் சீர்கெட்ட நிலையிலே உள்ளது.அது மட்டுமன்றி மலசலகூட வசதிகளும் போதிய வசதிகளை கொண்டில்லாமையினால் பெரும் பாலும் தமது இயற்கை கடன்களை இயற்கையுடனே இத்தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
அதேவேளை இத்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையினை எடுத்து நோக்குமிடத்து பெரும்பாலும் ஒரு குடும்பம் ஆறு குடும்ப அங்கத்தவர்களை கொண்டுள்ளது.இந்தளவு எண்ணிக்கையை கொண்ட குடும்பமொன்றின் மாதாந்த வருமாணம் (கணவன் மனைவி இருவரும் மாதமொன்றில் 24 நாட்கள் வேலை செய்திருப்பின்) அவர்கள் இருவரும் பெறும் மாதாந்த வருமாணம் 4480- ரூபாவாகும்.
ஆனால் அக்குடும்பத்தின் மாதம் ஒன்றிற்கான அண்ணளவான செலவு 4930- ரூபாவாகும்.(அரிசி-2750 ரூபா,மரக்கறி-1650 ரூபா,மின் பாவனை 530 ரூபா)
ஏனைய சமூகங்களிடையே ஒப்பிடுமிடத்து இத்தொழலாளர் சமூகம் பாரிய இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.அதேவேளை இத்தொழிலாளர்களுடன் இ;வ்விடயம் தொடர்பாக உரையாடுகையில் விரக்தியுடனும் மன உளைச்சலுடனும் உரையாடுவதனை காணக்கூடியதாயிருந்தது.ஆண் பெண் என்ற வேறுபாடின்றி அனைத்து தொழிலாளர்களும் சுமார் நாற்பது வயதை எட்டிய நிலையில் ஏனைய சமூகத்தினரைப் போலல்லாமல் திருப்பதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அதேவேளை இறுதியாக இத்தொழிலாளர்களுக்கு 2001 ஆம் ஆண்டே ஊழியர் சேமலாப நிதியப்பற்றுச்சீட்டு கையில் கிடைத்துள்ளது.ஆனால் அதற்குரிய தொகை இன்றும் அவர்களது சம்பளப்பட்டியலிலிருந்து அறவிடப்பட்டுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது.
அதேவேளை இத்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தோட்டநிர்வாகம் தெரிவிக்கின்ற அதேவேளை இத்தோட்டங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஹந்தானை வெஸ்ட் டிவி~ன் என்றழைக்கப்படும் தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச் வீதம் இலவசமாக காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளது.இது வரவேற்கக்கூடியதொரு விடயமாகும்.இக்காணியில் வீடு கட்டுவதற்காக 50000 ரூபாவினை கடனாக வழங்குவதாக தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.ஆனால் இவ்விரண்டு வருடகாலப்பகுதியில் 20000 ரூபாவினையே வழங்கியுள்ளனர்.
இக்கடன் தொகை தொழிலாளர்களின் சம்பளப்பணத்திலிருந்து அறவிடப்படுகின்றது.மாதாந்தம் 537.50 ரூபா வீதம் அடிப்படையில் பதினைந்து வருடங்களுக்கு அறவிடப்படுகின்றது.பதினைந்து வருட முடிவில் இவ் ஐம்பதாயிரம் தொகைக்கு பதிலாக தொழிலாளியொருவர் செலுத்தி முடிக்கும் தொகை 96750 ரூபாவாகும்.மேலதிகமாக 46750 ரூபாவினை செலுத்துகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இவ்விடயம் தெரியாதுள்ளமையே மிகவும் வேதனைக்குரிய விடயமாகவுள்ளது.ஒருகாலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக வர்ணிக்கப்பட்ட இத்தொழிலாளர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் இதுவா என்ற கேள்வியும் எழுகி;னறது.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிர்வாக முகாமையாளருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது கைகூடவில்லை.அதேவேளை இவ்விடயம் தொடர்பாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சி பி ரத்னாயக்கவிடம் கேட்டபோது அவர் எனக்கு அவ்வாறானதொரு முறைப்பாடு இதுவரை கிடைக்கவில்லை அவ்வாறு கிடைத்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.அது தனியார் கம்பனியாக இருந்தாலும் சரி ஜனவசமாக இருந்தாலும் சரி.அத்துடன் இது தொடர்பாக சரியான முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து அது தொடர்பான தீர்வுகளை எடுப்பதற்கு தான் எந்நேரமும் தயாரெனவும் அவர் குறிப்பிட்டார்.
எது எவ்வாறிருப்பினும் மலையக மக்கள் இருநூறு வருட காலங்கள் ஏமாற்றப்பட்டு வந்த காலம் போதும்.இனிமேலும் இம்மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.அதுவே அம்மக்களுக்கு அம்மக்களை பிரதிநித்துவம் செய்யும் அரசியல் தலைமைகளின் மிகப்பாரிய கடமையாகும்.ஹந்தானை தோட்ட மக்களும் அதனையே எதிர்ப்பார்க்கின்றனர்.

அசமந்தப் போக்கில் மாவத்தகமை தோட்டப்பாடசாலை ஆசிரியர்கள்


எஸ்.நயனகணேசன்
படப்பிடிப்பு:- துஷான்

“எமது பாடசாலையில் பல வருடங்களாக பெருமையடையக் கூடிய வகையிலான பெறுபேறுகள் ஈட்ட முடியாதுள்ளமை எமது சமூகத்தின் எதிர்கால கல்வியினை கேள்விக்குறியாக்கியுள்ளதென” குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளருமான எஸ.கதிர்காமநாதன் கவலை தெரிவித்துக்கொள்கின்றார்.
குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மொத்த ஏழு பாடசாலைகளில் குஃசரஸவதி தம்ழ் வித்தியாலய தோட்ட பாடசாலையும் ஒன்று.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கை பெருந்தோட்டங்களில் குடியமரச் செய்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்காக முதன் முதலில் “பிள்ளை மடுவமாக” அதாவது பிள்ளை பராமரிப்பு நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் 1948 ஆம் ஆண்டு அரச மயமாக்கப்பட்டது.ஆரம்பகாலத்தில் சுமார் முப்பது மாணவர்களுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.அதன் பிற்பட்ட காலப்பகுதியில் முன்னூறு மாணவர்கள் வரை அதிகரித்த அவ் எண்ணிக்கை தற்போது 140 மாணவர்களை கொண்டு இயங்குகிறது.ஆண்டு ஒன்று முதல் பதினோறாம் ஆண்டு வரை இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
140 மாணவர்களை கொண்ட மாணவர்களிற்கு பதினொறு ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.அவர்களுள் முவர் ஆண்களாவார்கள்.அதேவேளை பத்து வருடத்திற்கு மேலாகவும் இப்பாடசாலையில் ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.கதிர்காமநாதன் மேலும் கருத்து தெரிவிக்கையில் பாடசாலையின் கல்வித் தரம் பற்றி அதிபருடன் கதைக்குமத் போது ஆசிரியர் பற்றாக்குறையென்றே தெரிவிக்கின்றனர்.எமக்கு என்றைக்காவது பாடசாலையின் பௌதீக வளங்களை கட்டியெழுப்பிக் கொள்ளலாம்.வருடந்தோறும் வீழ்ச்சியுறும் மாணவர்களின் கல்வித்தரத்தினை கட்டியெழுப்புவதில் நாம் மிகுந்த அவதானத்தினை செலுத்துதல் வேண்டும்.இதனையே நாம் இன்று மேற்கொள்ளல் வேண்டும்.அத்துடன் இப்பாடசாலை மீது மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
பல வருட காலமாக ஆசிரியர் பற்றாக்குறையில் இருந்து வந்த இ.ப்பாடசாலைக்கு கடந்த ஒரு வருட காலமாகவே ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.பாடசாலையின் சிறந்த வளர்ச்சிக்கு சிறந்த வளமுகாமைத்துவம் இருத்தல் வேண்டும்.மாணவர்களுக்கு சிறந்த காலத்திற்கேற்ற சிறந்த தொழில்நுட்ப கல்வியினை பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.அத்துடன் பெற்றோர்களின் உற்சாகமின்மை காரணமாகவும் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாகவுள்ளது.”பாடசாலைக்கு சென்று வந்தால் மட்டும் போதும் என்ற நிலைப்பாட்டில் இப்பிரதேச மக்கள் இருந்து வருகின்றமையும்” மிகவும் கவலைக்குரியது.
மற்றும் இப்பாடசாலையில் சிறந்த முகாமைத்துவம் இன்மை காரணமாகவும் பாடசாலையின் அபிவிருத்தி பனிகள் தாமதமடைந்து வருவதாகவும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பழைய மாணவர்களினால் முன்வைக்கப்படுமம் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்துக் கேட்பதற்கு பாடசாலையின் அதிபரிடம் தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் முயற்சித்தப்பொதும் அது கைக்கூடவில்லை.அதேவேளை பாடசாலைக்கு பல தடவைகள் நேரடியாக சென்று சந்திப்பதற்கு முயற்சித்தப்போதும் அதனை அவர் நிராகரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள்,அபிவிருத்திச் சங்கம் சகலரும் ஆக்கப்பூர்வமாக செயற்படுதல் வேண்டும். எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தாமல் காலத்தை கடத்தி விட்டு பழன்னர் ஆசிரியர் பற்றாக்குறை என அரசாங்கத்தை குறை கூறுவதில் எத்தகையப்பிரநேஷயாசனமும் கிட்டப்போவதில்லை.
ஆசியர் தொழில் புனிதமானதொன்றாகும்.சம்பளத்துக்கு செய்யும் தொழிலாக இதனைக் கருதினால் அது சமூகத்திற்கும் எமக்கும் நாங்களே செய்யும் துரோகமாகும்.பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையையும் தமது சொந்த பிள்ளையாகக் கருதி அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டி நல்லறிவை ஊட்டுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் கடமைபட்டிருக்கின்றனர்.தெய்வமாக கருதும் ‘குரு’மார்,அந்த மேன்மையை கொளரவத்தை பாதுகாத்து குறுகிய மனப்பான்மையில் செயற்படாது பறந்த மனதுடன் பணி புரிந்து நல்ல சந்ததியை உருவாக்கும் எண்ணத்தில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சொல்லி வைக்கின்றோம்.

சமாதானத்திற்கு குந்தகத்தை விளைவிக்கும் பேரினவாத ஊடகங்கள்


எஸ்.நயனகணேசன்
படப்பிடிப்பு:- துஷான்

இருபது வருட காலம் ஆயுதங்கள் மூலம் வடக்கு கிழக்கில் யுத்தம் புரிந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தற்பொழுது அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் வகையில் பல வழிகளிலும் இன்று அப்பிரதேசத்திற்கு எதிராக யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதனை காணக்கூடியதாயுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு இந்நாட்டில் வாழ்வதற்கே அருகதையற்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் தமிழ் மக்கள் அல்லலுறும் நிலைமையில் அன்மைக்காலம் வரை விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த உத்தியோகபூர்வமற்ற யுத்தம் இன்று அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டு விடுதலைப்புலிகளின் மீது தாக்குதல் நடத்துவதாக புராணம் பாடிக்கொண்டிருக்கின்றது.அது இன்று உத்தியோகபூர்வமாக மாறியிருக்கின்றது.
தெருச்சண்டியர்களின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் கிட்டாது என்பதனை அன்மைய சம்பவங்களிலிருந்து இவை நன்கு காணக்கூடியதாயுள்ளது.
அந்த வகையிலே ஏ-9 பாதையை மூடிக்கொண்டு யாழ் மக்கள் மீது பட்டினிக் கொடுமையை ஏற்படுத்தி அதற்கு நியாயம் கற்பித்துக்கொண்டிருக்கும் கேவலமான நிலையினை கொண்டிருக்கின்றது தற்போதைய அரசாங்கம்.
அன்மைக்காலம் முதல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சங்காரம் இன்று தலைநகர் கொழும்பிலும் கட்டுக்கடங்காது செல்லும் நிலையில் தமிழ் மக்கள் பெரும் பீதியுடன் வாழ்கின்றதோர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை பட்டியலிட்டுக் கொண்டு செல்லக்கூடிய வகையில் இன்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
அதேவேளை ஆட்சியாளர்களைப் போன்று சிங்கள சமூகத்தினர் அனைவரும் இன்று யுத்த ஆய்வாளர்களாக காணப்படுகின்றமை அவர்கள் எந்தளவு போர் மனோபாவத்தினை கொண்டுள்ளனர் என்பதனையே இது நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
அந்த வகையில் அச்சமூகத்தினர் அவற்றின் உணர்வுகளை மேலும் தூண்டக்கூடிய வகையில் சிங்கள ஊடகங்களும் உண்மையான சம்பவங்களை திரிபுபடுத்தியும் உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகளை பிரிசுரித்து இனப்பிரச்சினையை மேலும் வலுவடையச் செய்வதற்கு வலிகோலுகின்றது. அந்த வகையில். கடந்த 02 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் இலக்குகள் எனக் கூறிக் கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சுத்தாக்குதலை சிங்கள ஊடகங்கள் அனைத்தும் அச்சம்பவத்தினை அரசாங்கத்தின் கூற்றை நியாயப்படுத்தும் வகையிலே தமது செய்திகளை பிரசுரித்திருந்ததனைக் காணக்கூடியதாயிருந்தது. அந்த வகையில்,

லங்காதீப தலைப்புச் செய்தி
கிளிநொச்சி பயிற்சி முகாம் மீது குண்டு தாக்குதல்மன்னார் கடற்படைத்தளம் மீதும் விமானத்தாக்குதல்வைத்திய சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் மீது குண்டுத்தாக்குதலில் ஐவர் பலி.
இச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் முகாம் மீதும் மன்னாரில் அமைந்துள்ள பிரதான கடற்படைத்தளம் மீதும் விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. புலிகள் தமது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கும் போதே விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதலின் போது புலிகளின் முகாம் தீப்பற்றி எரிந்ததாகவும் அச்செய்தியில் சாரம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திவயின முன்பக்கச் செய்தி
மன்னார் மற்றும் கிளிநொச்சி இரு முகாம்கள் நாசம்புலிகளின் தலைவர் ஒருவர் உட்பட ஐவர் பலி
லக்பிம தலைப்புச் செய்தி
கிபீர் விமானத்தாக்குதலில் கடற்புலிகளுக்கு பாரிய சேதம்பயிற்சி முகாமிலிருந்த பல உறுப்பினர்கள் உயிரிழப்பு
புலிகளின் இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்ஹ தெரிவித்ததாக கூறிய கூற்றை மேற்கொள் காட்டி தமது செய்தியினைக் குறிப்பிட்டிருந்தது.
தினமின பத்திரிகை - இச்செய்திப் பற்றி எவ்வித செய்தினையும் பிரசுரிக்கவில்லை என்பதும் குறிப்பிடவில்லை. அதே போல் தினகரன் பத்திரிகையும் இச்சம்பவம் பற்றி எதுவித செய்தியினையும் பிரசுரித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் ஏனைய தமிழ் நாளிதழ்கள் அனைத்தும் இச்சம்பவத்தினை தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
தினக்குரல் -கிளிநொச்சி ஆஸ்பத்திரி சுற்றாடலில் குண்டு வீச்சு இரு மாணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி 500 க்கு அதிகமான நோயாளர் பதறியடித்து வெளியேற்றம்.
வீரசேகரி – கிளிநொச்சியில் விமானக்குண்டு வீச்சு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி.கிளிநொச்சி பொதுவைத்தியசாலையும் சேதம்,நோயாளர்கள் வெளியேற்றம்.
சுடரொளி – கிளிநொச்சி நகரம் மீது முதல் முறையாக விமானக்குண்டு வீச்சு.ஐவர் உயிரிழப்பு மருத்துவமனை அருகே குடியிருப்புக்கள் மீது ';கிபிர்";; தாக்குதல்.
ஆங்கில பத்திரிகைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்கள் என்றே குறிப்பிட்டிருந்தன.
ஆனால் அங்கு இடம்பெற்ற சம்பவத்தினை இலங்கை போர் நிறுத்த கண்கானிப்பு குழுவினரும் விடுதலைப்புலிகளும் தெளிவாக எடுத்துக் காட்டியழருந்தனர்;.அச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்;களாவார்கள்.அங்கே புலிகளின் எந்தவொரு முகாமும் இல்லையென்பதனை அவர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்..ஆனால் இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில்; அவர்கள் அனைவரும் விடுதலைப்பலிகள் உறுப்பினராவார்கள்.உண்மை இவ்வாறிருக்கையில், ஆனால் எந்தவொரு பத்திரிகையும் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதனை பிரசுரித்திருக்க முன்வரவில்லை என்ப மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இதே போக்கினையே செஞ்சோலை மீதான தாக்குதலையும் சித்தரித்திருந்தனர்.அதேபோன்ற நடைமுறையினையே வாகரை அகதி முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான விமானக்கு குண்டுத்தாக்குதலையும் சிங்கள ஊடகங்கள் மாறுபட்ட செய்திப் போக்கினை கொண்டிருந்தன.
இவ்வாறான தொடர்ச்சியாக தகவல்களை வழங்கி வருவதன் மூலம் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை சாதாரணமாகவே கருதுவர்.ஊடகங்களின் பக்கச்சார்பான போக்கு காரணமாகவே இன்று தெற்கு மக்கள் மத்தியில் சமாதான உணர்வை ஏற்படுத்தவது பெரும் சவாலாக உள்ளது.