Thursday, January 11, 2007

மலையகத்தை யுத்த பீதிக்குள்ளாக்கும் இனாவத ஊடகங்களின் ஊடகப்பிரயோகம்

எஸ்.நயனகணேசன்

நாட்டின் இனப்பிரச்சினை இன்று உக்கிரமடைந்து செல்லும் இந்நிலையில் மலையகத்தில் வாழும் மக்களும் புலிகள் என்று அவர்கள் மீது முத்திரை குத்துவதற்கு பேரினவாதிகளும் இனவாத ஊடகங்களும் பிரயத்தனம் செய்து வருகின்றமை எதிர்காலத்தில் அம்மக்களின் நிம்மதியான வாழ்க்கையை சீர்குலைக்கும் ஓர் இழிசெயலாகும்.

ஜே.வி.பி கட்சியின் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தி வாராந்தம் பிரசுரமாகும் 'லங்கா" என்ற சிங்கள பத்திரிகை, கடந்த 07 ஆம் திகதி வெளியான தமது வார இதழில் 'புனித மலர்" என்ற பெயருடன் 10 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் 'பெருந்தோட்டங்களையும் புலிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கும் முயற்சியொன்று' என்ற தலைப்புடன் பெருந்தோட்டங்களில் வாழ்பவர்களும் புலி சந்தேகநபர்களென்ற புரளியை கிளப்பி விட்டுள்ளது.

அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது, கொழும்பு நகர் உட்பட நாட்டின் எந்தவொரு பிரதேசத்திற்கும் சுதந்திரமாக சென்று வருவதற்குள்ள தன்மை மற்றும் சிங்கள மொழியை சரளமாக பிரயோகிப்பதற்குள்ள திறமை காரணமாக புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்துவதற்கு புலிகளின் புலனாய்வு பிரிவு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு தரப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டும் தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு மாகாணங்கள் என்பதனால் இங்கு பாரியளவில் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

நீண்டகாலமாக அமைதியான முறையில் தோட்டங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்ட புலிகள் இயக்கம் தற்பொழுது அவர்களின் செயற்பாடுகளை பாரியளவில் மேற்கொள்வதற்கு தோட்ட இளைஞர்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்~;மன் கதிர்காமரின் புல்லர்ஸ் ஒழுங்கையில் அமைந்திருந்த வீட்டை வீடியோ படம் பிடித்துக்கொண்டிக்கையில் கைது செய்யப்பட்ட பசறை கோணாகலை தோட்டத்தைச் சேர்ந்த துவில் இத்தியம் மற்றும் பசறை வீதியைச் சேர்ந்த ஜகனம் என்ற இருவரும் ஊவாவை சேர்ந்தவர்களாகும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மூலம் ஊவா பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னர் பதுளை திக்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த எட்டு புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்தனர். அதேவேளை பதுளை ரிதீபான தோட்டத்தில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினரொருவரும் கைது செய்யப்பட்டார். அத்துடன் பதுளை லுனுகலை பொலிஸ் அதிகாரியொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இரு புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை பதுளை யூரி தோட்டத்தில் ஈழக்கொடியொன்று ஏற்றப்பட்டிருந்ததுடன் அக்கொடி ஜே.வி.பியுடன் தொடர்புடைய சில இளைஞர்களால் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான தோட்ட பிரதேசங்களில் மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு ஆயுதங்களின்றி உடல் ரீதியிலான போர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில் வெலிமடை ஒரிக் தோட்டம் மற்றும் அம்பேவெல தோட்டங்களை அண்மித்த பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய நான்கு தமிழ் இளைஞர்களையும் இரு யுவதிகளையும் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர். இவர்களிருவரும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவார்கள்.

குடும்ப நல சேவையாளர் சீருடைக்கு சமமான ஆடையுடன் பதுளை பெரிய ஆஸ்பத்திரிக்கு அருகில் வைத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த யுவதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் பதுளை நகரில் பயன்படுத்தப்பட்ட நான்கு முச்சக்கர வண்டிகளும் ஏழு வான்களும் காணாமல் போயுள்ளதாகவும் இவை புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவு சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கின்றது.

தற்பொழுது பதுளை மாவட்டத்தில் அதிகளவான தோட்;டங்களை அண்டிய பகுதிகளில் புலிப்பயங்கரவாதிகள் மூலம் நிதி சேகரித்தல் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடனும் தோட்டங்களில் பாரியளவிலான இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் போர் பயற்சிகளை பெற்றுவிட்டு தோட்டங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை பேணிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொனராகலை, பிபிலை மற்றும் படல்கும்புர ஆகிய பிரதேசங்களில் இவர்கள் சிங்கள யுவதிகளை திருமணமுடித்துள்ளனர். அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்பதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. இதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தினர் மூலம் மொனராகலையை அண்மித்துள்ள அதிமலை, கொட்டியாகலை, கேகலுயாய ஆகிய கிராமங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பாரியளவு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.

தோட்ங்களுக்கு புலிகள் இயக்கத்தினர் வந்து செல்லும் ஆபத்தினை கருத்திற்கொண்டு தோட்ட முகாமையாளர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அண்மையில் ஊவா மாகாணத்தில் விசேட பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்மாவட்டத்தின் 62 தோட்டங்களில் விசேட பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர நுவரெலியா, அட்டன், கண்டி மற்றும் கம்பளை அகிய தோட்டங்களிலும் அதிகளவிலான புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

அதேவேளை நுவரெலியா இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் புலிகள் இயக்கத்தினால் கொல்லப்பட்ட முதலாவது புலனாய்வு அதிகாரியாவார். இவர் தோட்ட பிரதேசங்களை புலனாய்வு செய்து வந்தவராவார்.

தோட்டங்களில் புலிகளின் செயற்பாடுகள் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஊவா மாகாணத்திற்காக புலிகள் இயக்கத்தினர் மூலம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மட்டக்களப்பு செங்கலடியில் அமைந்துள்ள முகாமிலிருந்து செயற்படுவதாகவும் புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தோட்டப் பகுதிகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு தோட்டங்களில் இயங்கும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புக்களிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கின்றது. இவ் அமைப்புக்கள் தோட்டடப் பகுதிகளில் ஈழக்கொள்கையை பரப்புவதற்கு திடமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல் ஊவா மாகாணத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் மீது மட்டும் எமது கவனம் திரும்பியுள்ளது. அவ் அமைப்பு ஊவா மாகாண சபையிலுள்ள தமிழ் அரசியல் வாதியொருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் அமைப்பு தோட்டங்களிலுள்ள இளைஞர் யுவதிகளை புலிகள் இயக்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் நுட்பமான முறையில் செயற்பட்டு வருவதனை காணக்கூடியதாகவுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கட்டுரையாளர் மேலும் அப்புத்தளை, பூனாகலை, பண்டாரவளை, மடுல்சீமை, ஹீனகலை, பசறை, அடாவத்தை, கந்தேகெதர, ரங்கமலேவத்தை, நாரங்கலை, சார்னியா தோட்டம் மற்றும் நக்கல தோட்டம் ஆகிய தோட்டங்களிலும் புலிகளின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவம் கண்டுபிடித்தள்ளார்.

இக்கட்டுரையில் பிரசுரமான தகவல்கள் தொடர்பாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழ் ஈழத்திற்கு வெளியில் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றவர்கள். இன்று சகலரும் எமது எழுச்சியை ஆதரிக்கின்றனர். எங்களுடைய துன்பத்திலும் வேதனையிலும் பங்கெற்கின்றவர்களாக காணப்படுகின்றனர்.

அது அமெரிக்காவானாலும் சரி மலையகமென்றாலும் சரி நாம் படும் துன்பங்களுக்காக வருந்தகின்றனர். இலங்கை அரசாங்கம் மற்றும் பேரினவாத அரசியல் சக்திகள் தமிழர்கள் மீது பழி சொல்லி அச்சுறுத்தி வாக்கு பெற்றுள்ளமையே சிங்கள அரசாங்கத்தின் வரலாறு. அதன் அடிப்படையிலே பேரினவாத சிந்தனையுடன் அக்கட்டுரையில் தகவல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

யூரி என்ற தோட்டத்தில் ஈழக் கொடியொன்று ஏற்றப்பட்டதா என எனக்கு தெரியாது. ஆனால் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையோ புலனாய்வு நடவடிக்கைகளையோ எமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வெளியில் மேற்கொள்வதில்லை என்று அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஊவா மாகாண சபையின் உறுப்பினர் கா.வேலாயுதத்திடம் கருத்துக் கோட்டபோது இந்த பத்திரிகை அமைதியாக இருக்கும் மலையக இளைஞர்களின் மனதை வேறு திசைக்கு திருப்பும் ஓர் செயலாகும். பதுளை புலிகளின் மாகாணம் அல்ல. இங்கு சகல இன மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றாய் வாழும் மாகாணமாகும்.

மலையக சமூகம் பற்றி தப்பான கண்ணோட்டத்தில் வெளியிட்டுள்ள அக் கட்டுரையில் எவ்வித உண்மையும் இல்லை. மலையக இளைஞர்களை புலிகளென சித்திரிப்பதற்கு முயற்சியெடுத்துள்ளமை முற்றிலும் தவறானது. இப்பத்திரிகை இதன் மூலம் மலையகத்தில் யுத்த பீதியை ஏற்படுத்தவதற்கு முயற்சிசெய்துள்ளது. இது அம்மக்களை பொருளாதார ரீதியில் முடக்கும் ஓர் செயலெனவும் அவர் தமது விசனத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியிடம் கேட்டபோது எமக்கும் புலனாய்வு பிரிவிலிருந்து தகவல்கல் கிடைத்தள்ளன, பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதாக. இதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை எவ்வாறிருப்பினும் உறுதியற்ற சாட்சிகளின்றி தகவல்களை வெளியிட்;டிருப்பதால் இம்மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கடமையாகும். இதனால் அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

இவ்வாறான இனவாத கண்ணோட்டத்தில் செயற்படும் ஊடகங்களிடம் நாம் கேட்டுக்கொள்வது தமிழ் சமூகங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாதிருங்கள் என்பதாகும்.

No comments: