Wednesday, March 28, 2007

அல்லைப்பிட்டியும் விசாரணையும்


எஸ்.நயனகணேசன்
நான்கு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ் குடாநாட்டின் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான எந்தவொரு வழக்கு விசாரணையும் இதுவரை ஆக்கப்பூர்வமானதாக மேற்கொள்ளப்படாமையானது நீதித்துறையின் மீது பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது மேலும் இழக்கச் செய்கின்றது.


இந்நாட்டின் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான சரத் அம்பேபிட்டிய பாதாள உலக கோ~;டியினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது குற்றவாளிகள் ஒரு மாதத்திற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இது இலங்கையின் நீதித்துறையின் வரலாற்றில் ஏற்பட்ட குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட துரிதமான தீர்ப்பென குற்றவாளிகளை கண்டுபிடித்த பொலிசாரும் நீதித்துறையும் அரசாங்கமும் மார்தட்டிக் கொண்டது.


நாம் இங்கு கேட்க விரும்பும் முதலாவது கேள்வி அப்பாவி பொது மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குடும்பத்தோடும் படுகொலை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு மட்டும் பல வருடங்கள் கடந்தும் நீதி கிடைப்பதில்லை என்பதாகும். அப்படியாயின் இந்நாட்டில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நீதிபதியொருவர் கொலை செய்யப்பட வேண்டுமா? என்பதாகும்.
அன்றிரவு இரவு இடம்பெற்ற இக்கோரச் சம்பவம் பற்றி தமிழ் செய்தி நாளிதழ்கள் (15.03.2007ம் திகதி தினக்குரல்) பிரசுரித்த செய்தியின் ஒரு பகுதியினை இங்கே குறிப்பிடுதல் சம்பவத்தை மீட்டுப்பார்ப்பதற்கு ஆதாரமாகின்றது. 'இரவு 8.30 மணியளவில் அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றினுள் முகத்தை கறுப்புத் துணிகளால் மூடிக்கட்டியவாறு நுழைந்த ஆயுத பாணிகள் அங்கிருந்தவர்களை சுட்டுத்தள்ளியுள்ளனர்.


ஒன்றாக படுக்கையறையினுள் உறங்கிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்;தரையும் அவரது மனைவியையும் அவர்களுக்கிடையில் உறங்கிக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தையும் 4 வயது சிறுவனையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியுள்ளனர்.
தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது தாயும் தந்தையும் தங்களுக்கடையில் உறங்கிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக, அவர்கள் இருவரையும் தங்கள் மார்புடன் கட்டியணைத்த போதும் ஆயுத பாணிகள் அந்தப்பிள்ளைகளையும் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளனர்.


இவர்கள் மீது இருபதுக்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்து தலைப்பகுதிகளையும் மார்புப்புகுதிகளையும் சல்லடை போட்டுள்ளன.
இந்தச் சம்பவம் அப்பகுதி கடற்படை முகாம், பல காவலரண்கள், கடற்படையினரின் சோதனை நிலையத்திற்கு மிக அருகிலேயே நடைபெற்றுள்ளது. எனினும் படையினர் கூட அங்கு வரவில்லை.
இச்சம்பவத்தால் தீவுப்பகுதி அச்சத்தில் உறைந்து போயுள்ளது. அல்லைப்பிட்டியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கோயில்கள் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடற்படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் அவர்களே இப்பகுதியில் பல பொதுமக்களை கொன்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தச் சம்பவங்களுடன் தங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் படையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகும். அதன் பின்னர் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் அதேவேளை, படையினர் அவற்றை மறுப்பதும் பின்னர் அரசாங்கத்தினால் ஆணைக்குழுவொன்று அமைப்பதுடன் சம்பவம் தூக்கியெறிப்படுதல் ஒரு சம்பவமாகிவிட்டது.


அல்லைப்பிட்டி சம்பவம் பற்றிய வழக்கு இறுதியாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியொருவரினூடாக அடையாள அணிவகுப்பும் நடைபெறவிருந்தது. இவ் அடையாள அணிவகுப்பிற்காக கடற்படையினரே உட்பட்டிருந்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணிவகுப்பிற்கான சூழல் யாழில் இல்லையெனக் கூறி அம்பாறையிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ நடத்துவதற்கு யாழ் பாதுகாப்பு தரப்பினரால் முடிவு செய்யப்பட்டது. வடதுருவத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றினை பிரிதொரு இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுதலென்பது எவ்விதத்திலும் சாத்தியமற்றது. ஆனால் அதற்கான ஏற்பாடுகளோ அல்லது முன்னெடுப்புக்கள் எதுவுமோ இவ்வாரம் மேற்கொள்ளப்படவில்லை.


அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்காத்திற்குமிடையில் ஏற்பட்ட மோதல்களும் ஏ-9 பாதை மூடப்பட்டதும் இச்சம்பவம் பற்றிய பார்வை வேறு வடிவம் பெற்று முக்கியத்துவமற்றதொரு சம்பவமாக உருவெடுத்து விட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹே~; பெரேரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று யாழ் சென்று யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கலாக இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் அவை எதுவும் ஆரோக்கியமானதாக அமையவில்லை.
இச்சம்பவம் தொடர்பான இறந்த காலம் இவ்வாறு இருக்கையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தவொரு செயற்பாடுகளும் இதுவரை திருப்திகரமானதாக முன்னெடுக்கப்படவில்லை.
அல்லைப்பிட்டி சம்பவம் இடம்பெற்ற அதே திகதியில் மொத்தமாக பதின்மூன்று பேர் அக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் இவ்வாறு வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு செல்கையில் பொது மக்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய அரசாங்கமே அசமந்தப்போக்கில் இருக்கின்றமை தமிழ் மக்களுக்கு எவர் மூலமும் விமோச்சனம் இல்லையென்பதனையே இச்சம்பவம் புலப்படுத்துகின்றது.


இக்கட்டுரையினூடாக இச்சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் வரையில் எவருக்கும் இச்சம்பவம் நினைவில் இருக்காது மறந்திருப்பார்கள். ஆனால் துரதி~;டவசமான சம்பவம் யாதெனில் ஒரே இரவில் அப்பாவி பொது மக்கள் பதின்மூன்று பேர் மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட போது சிங்கள பத்திரிகைகளான திவயின, தினமின, லக்பிம மற்றும் லங்காதீப பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்க செய்தியாகவும் சிறு செய்தியாகவும் பிரசுரித்ததிலிருந்து அச்செய்திகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தினை அவை எந்தளவு நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இதைத்தவிர டெய்லி மிரர் பிரதான தலைப்புச் செய்தியாகவும் டெய்லி நியுஸ் பத்திரிகை மற்றும் த ஐலன்ட் ஆகிய ஆங்கில தினசரி பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்க செய்திகளாகவும் அறிக்கையிட்டிருந்தன.இவற்றுள் (15.05.2006ம் திகதி) தினமின பத்திரிகையில் முன்பக்க சிறு செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியை இங்கு குறிப்பிடுதல் மிகவும் முக்கியமானதாகும்.


'மண்டை தீவு சிவில் மக்கள் படுகொலையினை ஜனாதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்"யாழ் மண்டை தீவில் நேற்று முன்தினம் (13) சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தாம் கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிடுகின்றார். இத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பாக உடன் விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஆணையிடும் ஜனாதிபதி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தராதரமின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவே இச் செய்தி.


ஜனாதிபதி அவர்களே இச் சம்பவம் தொடர்பாக உங்களிடமே நாம் கேள்வியைக் கேட்கின்றோம்.இதற்கு யார் பதில் சொல்ல வேண்டும்.


தினக்குரல் 25.03.3007

No comments: