Sunday, March 18, 2007

யுத்தத்தில் உயிர் துறக்கும் உண்மை



picture by www.lankatruth.com
எஸ்.நயனகணேசன்

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டிய இலங்கையின் இனப்பிரச்சினையை இராணுவத் தீர்வில் வெற்றிக்கொள்ள முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் அரசாங்கத்தின் தாக்குதல்கள் அனைத்தும் மிகவும் திட்டமிட்ட வகையில் மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது.


அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்று வரும் போரை நியாயப்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் அமைச்சர்கள் என அனைவரும் பெரும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றனர்.


அதற்கேற்றாற் போல் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெல்லவின் தாஜா பன்னல்கள் அரசின் கடும்போக்கையும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளையும் உலகிற்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
அந்த வகையில் கடந்த 06 ஆம் திகதி ஐரிஎன் தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பான செய்தியில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்லை ஊடக துறைக்கு புதிய அத்தியாயமொன்றை இணைத்துள்ளார்.அது இஸ்ரேல் பற்றிய அத்தியாயமாகும்.


'1967 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தத்தின்போது அந்நாட்டின் 13 தொலைக்காட்சி சேவைகளில் ஒரு தொலைக்காட்சியாவது அவ் யுத்தத்தை விமர்சிக்கவில்லை." முழு உலகமும் விமர்சனம் செய்கையில் அவ்வாறானதொரு தேசப்பற்று அவர்களுக்கு இருந்தது.


விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவி வழங்கும் பல அலைவரிசைகள் உள்ளன.; அவற்றுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் நாம தெரிவிப்பதாவது அவற்றுக்கு பொது மக்கள் முடிவெடுப்பார்கள் என்பதாகும்.1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு எதிராக கொடூரமான கோர யுத்தமொன்றையே மேற்கொண்டது.அவ் யுத்தத்தில் எகிப்தினதும் சிறியாவினதும் பாரிய நிலப்பிரதேசத்தை இஸ்ரேல் பலவந்தமாக அபகரித்துக் கொண்டது.இதன் பின்னணியிலேயே இன்று அங்கு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது.


1967 ஆம் ஆண்டின் யுத்தத்தினை வரவேற்கும் இந்நிலைப்பாட்டை பலஸ்தீன் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரான மஹிந்த ராஜபக்~ ஏற்றுக்கொள்கின்றாரா? இந்நிலைப்பாட்டை பலஸ்தீன போராளிகள் ஏற்றுக்கொள்வார்களா?
இதன் மூலம் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல பிழை என தெரிந்துகொண்டும் ஊடகவியலாளர்களை பிழைகளுக்கு துணைபோகுமாறு கூறுகின்றார் என்பது அரசாங்கத்தின் தத்துவமென இதன்மூலம் புலப்படுத்துகிறதல்லவா?
அவரின் கூற்றுக்கு நாம் இவ்வாறு பதிலளித்தால்
அச்சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் சரியான தூரப்பார்வையுடைய ஊடகவியலாளர்கள் இருந்திருப்பார்களாயின் என்ன செய்திருக்க வேண்டும்? ஆக்கிரமிப்பின் யதார்த்தினை இஸ்ரேலிய மக்களுக்கு எடுத்துக்கூறுவதா? இல்லாவிடில் அமைச்சர் கேஹலிய குறிப்பிடுவது போல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு ஓ போடுவதா? அன்று அவ் அத்துமீறிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொள்iயொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடிந்திருப்பின் பலஸ்ததீன மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு இஸ்ரேல் மக்களை இணங்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அவ்வாறான ஊடகக் கொள்கையொன்றினை கட்டியெழுப்ப முடிந்திருப்பின் அப்படியாயின் இன்று மத்திய கிழக்கில் சிறந்த வரலாறொன்றை காண முடிந்திருக்கும்.
எமக்கு தெரிந்த மற்றும் நாம் கற்றுக்கொண்டுள்ள ஊடகவியலானது உண்மையை பொதுமக்களுக்கு எடுத்தியம்புவதாகும். அதைவிடுத்து குரங்குகளைப் போன்று கட்சிகளை விட்டு விட்டுத் தாவிக்கொண்டிருககும் அமைச்சர்களுக்கு கொடிபிடிப்பதல்ல.


அமெரிக்கா ஆப்கானிஸ்தானிற்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அமெரிக்காவில் இருந்தனர்.இஸ்ரேலுக்குள்ளும் அவ் ஆக்கிரமிப்புக்களை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.அவ் யுத்தத்திற்கு எதிராக சனத்திரளொன்று கட்டியெழுப்பப்பட்டதே இவ் ஊடகங்களின் விமர்சனங்களினடிப்படையிலேயாகும்.


ரம்புக்வெல்ல சிந்தனைக்கேற்ப யுத்தம் சரியாக மேற்கொள்ளப்படுகின்றதென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதாகும்.அவ்வாறு செய்யாதோர் தேசத்துரோகிகளாவார்கள்.விமர்சன ரீதியிலான ஊடகங்கள் யுத்தத்தை முழுமையாக ஆதரிப்பதில்லை.அதனால் அவை தேசத்துரோகிகளாகின்றன.அவ்வாறாகாமலிருப்பதாயின் அவர்கள் இஸ்ரேலின் உதாரணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அது முழு உலகமே பிழையென தெரிவித்த கருத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென தெரிவிப்பதாகும்.


1981 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தனவும் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவும் யுத்தத்தை சரியான வழியில் செய்வதாகவே தெரிவித்தனர்.அப்பொழுது அநுருத்த ரத்வத்தை யுத்தத்தினை விற்றுத் தின்பதாக ஜே.ஆரிற்கு எதிராக nரிவித்தார்.அன்று ஜக்கிய தேசியக் கட்சியில் அமர்ந்திருந்த கேஹலிய ரம்புக்வெல்லவின் கட்சி கூட சந்திரிக்கா யுத்தத்தை விற்றுத் தின்பதாக தெரிவித்தது.இன்று மஹிந்த ராஜபக்~வின் அரசாங்கத்தில் தாவிக்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காவிடில் மஹிந்த ராஜபக்~விற்கும் இவரின் அரிச்சந்திர வாயால் யுத்தத்தை விற்றுப்பிழைப்பதாக தெரவித்திருக்கக் கூடும்.


கிழக்கு மாகாணம் மீதான யுத்தம் போலியானதென தெரிவித்தது பத்திரிகையாளர்கள் அல்ல.இன்னும் அரசின்; சகாவான ஜேவிபியாகும்.கிழக்கு மீதான யுத்தம் உடனடியாக யுத்தத்தில் வெற்றி பெறுதல் என்பதே ஜேவிபி தலைவர் லால்காந்த பகிரங்மாக தெரிவித்திருந்தார்.அவ்வாறு விமல் வீரவன்சவும் தெரிவித்தார்.


ரம்புக்வெல்ல சிந்தனைக்கு ஏற்ப லால் காந்தவும் தேசத்துரோகி விமல் வீரவன்சவும் தேசத்துரோகி.


அமைச்சரின் கூற்றுக்கேற்ப பார்த்தால் இரணடாம் உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லர் கூட ஊடகங்கள் அனைத்தும் தமக்கு சார்பாகவே செயற்படவேண்டுமென கட்டளையிட்டிருந்தார்.அப்படியாயின் இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாலஸ்தீன மக்களின் கருத்துக்களை ஊடகங்கள் தெரிவிக்கக்கூடாதா?
அதே போல் இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தத்திற்கு எதிராக இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்கக்கூடாது என்பதனையே அமைச்சரின் கூற்று வெளிப்படுத்துகின்றது.


இவற்றின் மூலம் புலப்படுவது யாதெனில் யுத்தமொன்றின் போது முதலில் உயிர்துறப்பது உண்மை என்பதாகும்.


கவிஞர் அப்துல் ரகுமானின் மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல என்ற தனது கவிதை புத்தகத்தில் கூறிய கவிதையின் ஒரு பகுதியை குறிப்பிடுதல் மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

அது


அதிகாரம் விசித்திரமான சாராயம்.

அதைக் குடிக்கிறவன்தன்னை மறப்பதில்லை:

பிறரை மறந்து விடுகிறான்.


இது அமைச்சருக்கு எந்தளவுக்கு பொறுந்துகிறது.


தினக்குரல் 18.03.2007

No comments: