Friday, January 5, 2007

'மன்னாரில் இறந்த சிறுவர்கள் புலிகள் என்றால் கெப்பிற்றிகொல்லாவைவையில் இறந்த சிறுவர்களும் புலிகளே"










by tamilnet
Mannar attack

எஸ். நயனகணேசன்

ஊடகங்களிலும், வீதிகளிலும், விளம்பரங்களிலும் மற்றும் பொது மக்கள் மத்தியிலுமென அனைத்து இடங்களிலும் யுத்த கோ~ங்கள் இன்று தலைதூக்கியுள்ளதனை நன்கு அவதானிக்க கூடியதாயுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் பற்றி பெரும்பாலான சிங்கள சமூகங்கள் போர் விமர்சகர்களாக மாறியுள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
வடக்கு கிழக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் தினமும் அப்பாவி பொது மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை.
அந்த வகையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தத்தினை சிங்கள மக்களுக்கு மாறுபட்ட வகையிலும் பாரபட்சமான முறையிலும் அரசின் செயற்பாடுகளுக்கு ஜால்ரா போடும் வகையிலும் செயற்பட்டு வருகின்றமை இவ் யுத்தத்திற்கு வலுச் சேர்க்கின்றது.
கடந்த பல வருடங்களாக சிங்கள பேரினவாத ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த உளவியல் ரீதியிலான ஊடகப் போர் இன்று அது முழு அளவிலான ஊடகப் போராக உருவெடுத்துள்ளதனை அவ் ஊடகங்களின் செய்தியறிக்கைகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது.
இன்று அரசாங்கமும் விடுதலை புலிகள் மீதான போரை முழு அளவில் மேற்கொள்வதற்காக நாட்டின் அனைத்து மக்களுக்கும் அறைகூவல் விடுத்திருக்கின்றதனை அதன் செயற்பாடுகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது. போர் என்ற பெயரில்

by Anurudha lokuapuarachchi

Kepittigollewa attack

பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது அரச படைகள்.
2007 ஆம் வருடத்தின் ஆரம்ப வைபவமாக அரச படைகள் மன்னார் படகுத்துறை கிராமத்தில் தமது காட்டுமிராண்டித்தனத்தை அப்பாவி பொது மக்கள் மீது எடுத்தக்காட்டியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு புலிகள் என்ற முத்திரையையும் குத்தியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினை அன்று இந்தளவு உக்கிரமடைந்தமைக்கு ஆட்சியிலமர்ந்த பேரினவாத அரசாங்கங்கள் மட்டுமன்றி பேரினவாத ஊடகங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக அமைந்துள்ளது.
அந்த வகையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளை பெரும்பான்மை சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரினவாத ஊடகங்கள் அவ் வன்முறைகளை திரிபுபடுத்தியும் மாறுபட்ட வகையிலும் சிங்கள சமூகத்தினருக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வாறான ஊடக பிரயோகத்தின் விளைவாக 'சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற வினாவை வியப்புடன் கேட்குமளவிற்கு விசித்திரமாகவுள்ளது.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி படகுத்துறை கிராமம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் பலியானமை உலகறிந்த உண்மையாகும். அத்தாக்குதலில் சிறுவர்கள், பொதுமக்கள் உயிரழந்தமைக்கு புகைப்படங்களுடன் சாட்சிகள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு பிரிவு அலுவலகம் கடந்த 03 ஆம் திகதி விடுத்த அறிக்கையிலும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் விடுத்த அறிக்கையில் 1995 ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மிகவும் வறிய மக்களே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தமது கண்டனத்தையும், கவலையையும் மற்றும் உண்மைச் சம்பவத்தினையும் எடுத்துரைத்துள்ளார்.
இத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று மாலை முழு உலகிற்கும் ராய்ட்டர் செய்திச் சேவை மற்றும் பிபிசி ஏஎப்பி ஆகிய செய்தி சேவைகளும் காயமடைந்த உயிரிழந்த சிறுவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்திருந்தன.
சிங்கள பத்திரிகைகளை தவிர பிரதான தர தமிழ் பத்திரிகைகள் மூன்றும் புகைப்படங்களுடன் பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
ஆங்கிலப் பத்திரிகைகள் பல்வேறுபட்ட வகையில் செய்திகளை பிரசுரித்திருந்தன. ஆனால் அவை எந்தவகையிலாவது பொது மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதனை குறிப்பிட்டுள்ளன. டெய்லி மிரர் மற்றும் மோர்னிங் லீடர் ஆகிய பத்திரிகைகள் அனைத்து தரப்பையும் ஆவணப்படுத்தியிருந்தன. ஆனால் காயமடைந்தவர்களின் புகைப்படத்தினை பிரசுரிப்பதற்கு மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு மட்டுமே தைரியம் ஈரந்துள்ளது.
சிங்கள நாளிதழ்களில் லக்பிம பத்திரிகை '300 கடற் புலிகள் கூடியிருந்த புலிகளின் முகாம் மீது விமானப்படை தாக்குதல். இத்தாக்குதலில் 30 புலி உறுப்பினர்கள் மரணம்". என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் உயிரிழந்தவர்கள் பற்றி எவ்வித தகவலையும் பிரசுரிக்கவில்லை. அவ்வாறான செய்தியை அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் லக்பிம பத்திரிகை மிகப் பாரிய பொய்யை தமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
வழமைக்கு மாறாக செய்திகளை (வடக்கு கிழக்கு செய்திகளை மட்டும்) பிரசுரிக்கும் திவயின பத்திரிகை பெரிதாக அச்சம்பவத்தினை அறிக்கையிடவில்லை. லங்காதீப பத்திரிகை அச்சம்பவத்தினை முன்பக்க செய்தியாக பிரசுரித்திருந்தது.
தமிழ் பிரதேசங்களில் தமிழர்கள், சிறுவர்கள் , பெண்கள் கொலை செய்யப்படும் பொழுது சிங்கள நாளிதழ்கள் அவற்றை பிரசுரிப்பதில்லை. இது ஊடக ஒழுக்க நெறிக்கு முற்றிலும் புறம்பானது. சிங்கள நாளிதழ்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்லவின் கூற்றுக்கு படகுத்துறையில் உயிரிழந்த சிறுவர்களும் பெண்களும் புலிகள் என்றால் கெப்பிற்றிகொல்லாவை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களும் பெண்களும் புலிகளாவார்கள்.
அந்த வகையில் கடந்த வருடம் ஜுன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் வங்காலை தோமஸ்புரியில் குடும்பமொன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இது வரையில் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையிலே மற்றுமொறு கோரத்தாண்டவம் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கும் சொல்லுவார்களா? சாக்கு போக்கு. அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வியை அரசாங்கத்திடமும் சிங்கள ஊடகங்களிடமும் கேட்கின்றோம்.

No comments: